தாய் மொழியையும், தாயகத்தையும் நேசிக்கும் எங்கள் அன்பான உறவுகளே! உங்களோடு எம்மைப்பற்றி . . . .

போரும் போர் சூழ்ந்த வாழ்விலும் இரண்டறக் கலந்து, அப்போர் வாரி இறைத்த பெரும் கொடுமைகளை தன்னகத்தே சுமந்து முள்ளிவாய்க்கால் மெளனிப்பின் பின்னர் நேரடியாகவும், மறைமுகமாகவும் துன்பங்களை அனுபவித்து வரும் எமது தேசத்து உறவுகளின் நலன் பேணலுக்காக, அவ் உறவுகளின் விழுதுகளாகிய புலம்பெயர் தமிழர்களின் கூட்டு முயற்சியின் வெளிப்பாகி உதயமாகியது “நம்பிக்கை ஒளி” எனும் சமூகப் பொறுப்பு வாய்ந்த ஓர் உயரிய அமைப்பு.

மேற்குலக நாடுகள் ஒவ்வொன்றிலும், அந்நாட்டின் சட்ட வரைபுகளுக்கும், இறையாண்மைக்கும் மதிப்பளித்து,ஆட்சி முறைமைகளின் வரையறைகளுக்கு உட்பட்டு தனக்கென ஓர் நின்று நிலைக்கும் யாப்பு விதிமுறைகளை உருவாக்கி, அதனூடாக தன் செயற்பணிகளை யேர்மனியிலும் முன்னெடுத்து வருகின்றது. மக்களில் இருந்து, மக்கள் மூலமாக தெரிவு செய்யப்பட்ட பல்துறைசார் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிர்வாகக்கட்டமைப்பினையும், அந்த நிர்வாகக் கட்டமைப்பின் எதிர்பார்ப்புக்களை இயன்றவரை ஈடுசெய்யும் வகையிலான உழைப்பாளிகளாக எல்லா மனங்களிலும் இருந்து இணைக்கப் பெற்றுள்ள தொண்டர்கள், இளையோர்களின் கால நேரம் பாரா கடின உழைப்பின் மூலமும் நம்பிக்கை ஒளியானது தொடர்ந்தும் எம் மக்களுக்கு உண்மைத் தன்மையோடும், வெளிப்படை மனப்பாங்கோடும் உறுதியாக செயற்பட திட்டமிட்டு முன் செல்கின்றது. எமது செயற்பணிகளுக்கும் அதனூடான தாயக உறவுகளின் உதவிப் பகிர்விற்கும் புலம்பெயர் எம் உறவுகளே! எம்மோடு கரம் பற்றி ஓராணியாய் உழைப்போம் “மெல்லமெல்ல ஆனால் உறுதியாக முன் செல்வோம்”

எமது வேலைத் திட்டங்கள்.

  1. போரினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் நலன்சார் விடயங்களுக்காக தொடர்ந்து செயற்பட்டாலும், போரினால் அதிகளவு பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படையிலேயே முன்னுரிமைப்படுத்தி சரியான வகையில்இனங்காணப்பட்ட பயனாளிகளுக்கு, அவர்களின் முழுமையான தேவையினையும் பூர்த்தி செய்ய தொடர்ச்சியாக,அல்லது கட்டம் கட்டமாக உதவுதல்.
  2. போரினால் பாதிக்கப்பட்டு தொடர்பற்ற நிலையில் சிதைவடைந்து போயுள்ள அல்லது தொடர்பற்ற நிலையிலுள்ள குடும்பங்களை ஒருங்கிணைப்பதற்கான செயற்பணிகளை முன்னெடுப்பதுடன், அனாதரவான நிலையிலுள்ளகுடும்பங்களை புலம் பெயர் தேசத்திலுள்ள உதவி புரியும் தகமையுடைய குடும்பங்களுடன் இணைத்தல்.
  3. போரினால் அதிகளவு பாதிக்கப்பட்ட எமது மக்களின் ஜீவனோபாயத்திற்கான திட்டங்களை இனங்கண்டு, அவற்றைதனியாகவோ அல்லது குழுவாகவோ நடைமுறைப்படுத்தி, தம்மில்த் தாமே தங்கி நிற்கும் சுயசார்பு நிலையைஏற்படுத்துதல்.
  4. தாயகத்தில் ஆதரவற்ற சிறுவர்கள், முதியோர்கள் மாற்று வலுவுடையோர், போசாக்குக் குறைவானவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பராமரித்து வரும் அமைப்புக்களுக்கான, பல்வேறு தேவைகளை இயலுமானவற்றை சுமூகமானமுறையில் நிறைவு செய்யப் பாடுபடுதல்.
  5. போரினால் அங்கவீனர்களாகவும், பாரிய விழுப்புண்களை உடையவர்களுக்கும் அவர்களின் தொடர்ச்சியானமருத்துவத் தேவைகளுக்கு உதவுதல்.
  6. நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ச்சியாக பாதிக்கப்படு வரும் எமது மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு சகமனிதர்களின் வாழ்வியல் விடயங்களோடு சமநிலை பெறுவதற்கு தேவையான சட்ட மூலங்களைப் பெறுவதற்கு,துறைசார் வல்லுனர்களின் தொடர்புகளை ஏற்படுத்துதல், அதனூடாக தெளிவு நிலையை ஏற்படுத்த முயற்சித்தல்.
  7. சுயதொழில் ஊக்குவிப்பு முயற்சிக்கான கடனுதவி வழங்குதலும், நின்று நிலைக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கு வழி வகுத்தலும்.கல்விப்புல செயற்பாடுகளை முன்னெடுப்பிற்கு போதிய வசதிகளின்றி மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களின் கல்விப்புல விருத்திக்காக உதவுவதுடன், எமது சமூகத்தின் கல்விப்புலமேன்மையைக் காத்தல்.

நீங்களும் நாங்களும் . . . .மேலே குறிப்பிடப்பட்டுள்ள எமது செயற்பாடுகள் அனைத்தும், புலம்பெயர் உறவுகளின் உதவிகளை ஒருங்கிணைத்தும், நம்பிக்கை ஒளியின் வருமானமீட்டும் பல்வேறு திட்டங்களின் மூலமும் பெறப்படும் நிதி மூலங்களிலிருந்து (குறிப்பாக நல்வாய்ப்புச் சீட்டுக்குலுக்கல், சிற்றுண்டிச்சாலைகள் அமைத்தல் போன்றவற்றிலிருந்தும்) ஈடு செய்து வருகின்றோம்.